இந்திய அளவில் காங்கிரஸ் கூட்டணி தனிப்பெரும்பான்மை பெறும் என்று எந்த கருத்துக் கணிப்பும் கூறமுடியாத நிலையில் கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் தங்கள் கணிப்புமுறையை மேலும் அறிவியல் சார்ந்த முறையில் மாற்ரிக்கொள்ள வேண்டும். இல்லையென்றாலும் பாதகமில்லை - நம் நாட்டின் எண்ணிலடங்கா செய்தித்தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தேர்தல் நேரங்களில் "நேர நிரப்பி" யாக இருந்து கொள்ளும். கணிப்பாளர்கள் முக்கியமாக, மேற்குவங்கம், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் மற்றும் முக்கிய வட இந்திய மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியைக் கணிக்கத் தவறி விட்டனர். தென்னகத்தைப் பொறுத்தவரை ஓரளவிற்குக் கணித்தது நடந்தது. ஆந்திரா - கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியும் கர்நாடகாவில் பாஜகவும் எதிர்ப்பார்த்தபடியே வென்று இருக்கின்றன.
தமிழ்நாட்டில்...
இலங்கைப்பிரச்சினைக்கு சமீபகாலத்தில் குரல் கொடுத்து தமிழீழப் பிரச்சினைக்கு உயிர் கொடுத்தவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா. பாண்டியன் அவர்கள். இவருக்கு முன்பே வைகோ பழ. நெடுமாறன் போன்றவர்கள் தொடர்ந்து தமிழீழ - புலிகள் குறித்து கருத்துக்கள் தெரிவித்து வந்தாலும், கடைசிக்கட்ட ஈழப்போரின் தீவிரமும் அதனால் உயிரிழந்த எண்ணற்ற தமிழர்களும் அங்கு நடக்கும் அவலங்களும் இதனால் ஒளி பாய்ச்சப்பட்டு தமிழகத்தின் பார்வை ஈழத்தின் மீது பட்டது.
"தமிழகத்தின் பார்வை" என்று பொதுமைப்படுத்திக் கூறிவிட்டேனோ! சரி. அரசியல்வாதிகளின் - ஊடகங்களின் பார்வை என்பது சரியாக இருக்கும். இதனால் நம்மைப் போன்றவர்களுக்கு ஈழப்பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய ஆரம்பித்தது - ராஜீவ் படுகொலையைத் தொடர்ந்து நமக்கு ஈழப்பிரச்சினை - புலிகள் மீதிருந்த தயக்கங்களை மீறி. இருந்தாலும், நம் அரசியல் தலைவர்களின் கோரப்பார்வைப் பட்டு விட்டதே! தங்கள் அரசியல் பலன்களுக்கு இதை எப்படி பயன் படுத்தலாம் என்று யோசிக்க ஆரம்பித்தனர்.
கலைஞருக்கு அந்த நேரத்தில் தமிழ்நாடு முழுதும் இருந்த மின்வெட்டு பிரச்சினையின் வீச்சை எப்படி குறைப்பது என்றிருந்த போது கிடைத்த அற்புதமான ஆயுதமாகிவிட்டது, இப்பிரச்சினை. தன் கட்சியினரையும் தன் கூட்டணியினரையும் சேர்த்து போராட ஆரம்பித்துவிட்டார். கவர்ச்சிக்குத் திரைத் துறையினர் வேறு. உண்ணாவிரதம், மனிதச்சங்கிலிப் போராட்டம்... கவனிக்கவும் இவையாவும் மத்திய அரசை எதிர்த்து அல்ல. ராஜபக்ஷேவின் இனவெறி பிடித்த சிங்கள அரசை எதிர்த்து. மத்திய காங்கிரஸ் அரசோ புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவைக் கொடுத்து வந்தது. அந்த காலக்கட்டத்தில் போர்நிருத்தம் வேண்டும் என்று ஒரு உல்லலாயிற்க்காவது, தமிழக மக்களைத் திருப்தி படுத்துவதற்காக, இலங்கை அரசிடம் மத்திய அரசு கேட்ககூடவில்லை. வெறுமனே அப்பாவி மக்கள் பாதிக்கப் படாமலிருக்க தேவையான முயற்சிகளை எடுப்பதில் இலங்கை அரசை கேட்டுக் கொள்வதாகக் கூறி வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தது.
திமுக அரசு ராஜபக்ஷே அரசாங்கத்தை எதிர்த்துப் போராடியது. மாம்பழ பாமகவும் திமுகவைப் போன்றே ராஜபக்ஷேவின் இனவெறியை எதிர்த்துப் போராடியது. மத்திய அரசில் தன் மகன் அப்போது அங்கம் வகித்ததால் சாதிவெறியால் வளர்ந்த ராமதாஸுக்கு ராஜப்க்ஷேவின் இனவெறியைக் கண்டித்தார் - நம் மத்திய அரசின் புலிகளை அழிக்க வேண்டும் என்ற வெறி அவருக்கு அப்போது கண்களுக்குத் தெரிய வில்லை.
கலைஞருக்கும் தமிழ்நாட்டு காங்கிரஸிற்கும் இப்பிரச்சினையால் வந்த சிறுபூசல்களைக் கண்டார், ஜெயலலிதா. திமுகவிற்கும் காங்கிரஸிற்கும் பிளவு ஏற்படுத்தி காங்கிரஸைத் தன் வசப் படுத்த இதனைப் பயன் படுத்திக் கொள்ள ஜெயலலிதா ஆசைப் பட்டார். "புலித் தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தம் நடக்கையில் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப் படுவுது தவிர்க்க இயலாது" என்று சொன்னார் ஜெயலலிதா. பிறகு, காங்கிரஸுடன் கூட்டணி சாத்தியமில்லை என்று தெரிய வந்தது, கூடவே தேர்தலுக்கான தேதியும். கேப்டன்(!?) விஜயகாந்திற்கும் காங்கிரஸுடன் காதல் இருந்ததால் இலங்கைப் பிரச்சினையில் அமைதி காத்தார். இவர் முன்னொரு காலத்தில் தன்னுடைய ஒரு திரைப்படத்திற்கும் பின் தன் மூத்த மகனுக்கும் பிரபாகரன் என்று பெயர் சூட்டி தன் புலிப்பாசத்தைக் காட்டியவர்.
இதற்கிடையே இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஒன்று எதிர்க்கட்சியினரால் பழ. நெடுமாறன் தலைமையில் தோற்றுவிக்கப் பட்டது. இதே போன்ற பெயரில் திமுகவும் ஒரு போட்டி இயக்கம் ஆரம்பித்தது - அதில் காங்கிரஸும் இருந்தது. கடைசி நேரத்தில் மருத்துவர் ராமதாஸுக்கு மத்திய மாநில அரசுகளின் துரோகம் தெரிய வந்து - பதவியை முழுமையாக அனுபவித்த பின் - அரசிலிருந்து விலகினார்.
திமுக-காங்கிரஸ்-விடுதலைச் சிறுத்தைகள் ஒரு அணி.
அதிமுக-பாமக-மதிமுக-கம்யூனிஸ்டுகள் எதிர் அணி.
இலவு காத்த கிளியாக காங்கிரஸுக்கு எதிர்பார்த்து - அதுவும் தன் தலைமையில் - அது முடியாது என்பதால் கடவுள்-மக்கள்-தேமுதிக கூட்டணி. இதேபோல் தேமுதிகவை எதிர்பார்த்து ஏமாந்த பாஜக தமிழ்நாட்டின் நகைச்சுவையாளர்களுடன் நான்காவது அணி.
தேர்தல் முடிவுகள் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குச் சாதகமாக வரவே நம்மில் பலர் ஆச்சர்யத்துடன் (அதிர்ச்சியுடன்?!) பார்த்தனர். தேசிய அளவிலும் காங்கிரஸே முன்னணியில் இருக்க, நம் தமிழ்நாட்டு முடிவுகள் அதனைப் பிரதிபலிப்பதாகவே எடுத்துக் கொள்ளலாம். தேசிய அளவில் மூன்றாவது அணி தோற்பதற்கு கேரள ஆந்திர வங்காள மாநிலங்கள் காரணமாகின. பாஜகவில் அத்வானி பிர்தமர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டதிலிருந்தே அதன் கூட்டணியிலும், ஏன் கட்சியிலுமே ஏதேனும் சலசலப்புகள் கேட்டுக்கொண்டிருந்தன; அதுவே அவர்கள் தோல்விக்கும் காரணமாக இருந்திருக்கலாம். ஒரு வேளை, தமிழ்நாட்டில் மட்டும் அதிமுக அணி வென்றிருந்தால், இப்போதைய சூழலில் அந்த அணி அப்படியே காங்கிரஸ் அரசுக்குத் தன் ஆதரவைத் தெரிவித்து, தமிழ்நாட்டு திமுக ஆட்சியைக் கவிழ்த்து, இங்கு தேர்தலுக்கு வழிவகை செய்திருப்பார்கள். அன்புமணி ராமதாஸ் மீண்டும் சுகாதார மந்திரியாகப் பதவியேற்றிருப்பார். ஈழத்தமிழர்களின் பிரச்சினை? அதுவா முக்கியம் (வைகோ நிலை வேறாக இருந்திருக்கலாம் - அதனால் என்ன? அரசியலில் அழுது கொண்டிருந்தால் மட்டும் பத்தாது; நேரத்திற்குத் தகுந்தாற்போல் தங்கள் கொள்கைகளைத் திருத்திக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்). என்னைப் பொறுத்தவரை, இது சிறந்த தேர்தல் முடிவு; புலிகளையும், ஈழத்தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தியகாங்கிரஸ் தலைவர்கள் தோற்றுப் போனார்கள் - பாமகவின் படு தோல்வியால் அழுகிய மாம்பழம். பாமகவிற்கு எந்த வேளையில் மாம்பழத்தைச் சின்னமாகக் கொடுத்தார்களோ! குறுகிய காலத்தில் காயாகி, கனியாகி இப்போது அழுகிவிட்டது; மீண்டும் மலர அது தன் ஆரம்பக் காலத்திற்குச் செல்ல வேண்டும்... பஸ் உடைத்து, மரம் வெட்டி, தனியாக தேர்தலில் நின்று, தங்கள் வாக்கு வங்கியைக் காட்டி...
மொத்தத்தில் நம் தேர்தலில் , தமிழ்நாட்டில், ஈழப்பிரச்சினையை தேர்தல் பிரச்சினையாக்கியிருக்கக் கூடாது. இவர்கள் இப்போது உள்ள நிலைமையில், பிரபாகரனும் புலிகளின் முக்கிய போராளிகளும் கொல்லப்பட்டு விட்டதால் போர் முடிவுக்கு வந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள இந்த வேளையில் நம் அரசியல் தலைவர்கள் ஈழப் பிரச்சினையில் சொல்லும் கருத்துக்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
நம் நாட்டு அரசியல் வேறு - அரசியல் ஒரு தொழிலாகி, தேர்தல் செலவினங்கள் முதலீடாகி, ஆசைப்படும் மக்களுக்கு ஆங்காங்கே ரொட்டித் துண்டுகள் கொடுத்து, பதவிக்கு வந்தால் அதனைவிட பல நூறு மடங்கு அதிகம் சம்பாதித்து விடுகிறார்கள். அதனால் இங்கு ஒரு மாற்றம் வரவேண்டும்; அது பொறுமையான வேகத்தில் வந்தாலும் தவறில்லை. மக்களாகிய நாம் தேர்தலுக்கொரு முறை அரசியலைப் பற்றி சிந்தித்து விட்டு அவரவர் வேலைகளுக்குச் சென்றுவிடுவோம்.
ஈழத்தமிழர்கள்?! அவர்களின் இப்போதைய நிலை? தமிழீழக் கனவு? என்னவாகும்?